85 கேமரா, 5 ட்ரோன்கள்; சிக்காமல் தண்ணி காட்டும் புலி! – 16வது நாளாக தேடுதல் வேட்டை!
நீலகிரியில் 4 பேரை கொன்ற டி23 புலியை தேடும் பணி 16வது நாளாக தொடர்ந்து வருகிறது.
நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேர் மற்றும் பசுமாடுகளை ஆட்கொல்லி புலி ஒன்று கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் அனைத்திலும் தப்பிய புலி தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினக்குடி நோக்கி நகர்ந்ததுடன் அங்கு மாடு மேய்த்த ஒருவரையும் அடித்துக் கொன்றது. இந்நிலையில் டி23 புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமான பகுதிகளில் வனத்துறையினர் பரண் அமைத்து கண்காணித்து வருவதுடன், இரண்டு கும்கி யானைகளும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
மேலும் ஆங்காங்கே 85 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 5 ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலமாகவும் புலியின் இருப்பிடத்தை கண்காணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 16வது நாளாக இன்றும் புலியை தேடும் பணி தொடர்கிறது.