1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (14:20 IST)

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் இவ்வளவா? – புதிய சட்டம் விரைவில்..

மக்களவையில் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகையை அதிகரித்து புதிய மசோதா ஒன்று நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த மசோதாவின் மூலம் தற்போது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்ள அபராத தொகை அதிகரிக்கப்படுவதாக தெரிகிறது.

நாளுக்கு நாள் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் அதே சமயம், போக்குவரத்து விதி மீறல்களும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்கும் பொருட்டு தற்போதுள்ள போக்குவரத்து அபராத தொகைகளை புதிய மசோதாவில் அதிகரித்து தாக்கல் செய்ய உள்ளனர்.

இதுவரை சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 100 ரூபாயாக இருந்த அபராதம் 1000 ரூபாயாகவும், தலைகவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதத்தோடு 3 மாத காலம் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10000 ரூபாயும், ரேஸ் போன்ற பந்தயத்தில் ஈடுபட்டால் 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய மசோதாவனது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகே அமலுக்கு வரும். என்றாலும் அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்கு இதுபோன்ற அபராத அதிகரிப்பு அவசியம் என அமைச்சரவை கருதினால் மசோதா உடனடியாக அமலுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.