செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (12:04 IST)

பணத்தை வட்டிக்கு விட்ட ரஜினி: ட்ரெண்டான #கந்துவட்டிரஜினி

வருமான வரி தொடர்பான வழக்கில் ரஜினிகாந்த் அளித்துள்ள விளக்கத்தில் தான் பணத்தை வட்டிக்கு விட்டதாக குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005 வரை வருமான வரி கட்டவில்லை என ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் ஆண்டுதோறும் அவருக்கு விதிக்கப்பட்ட வருமானவரி ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவானதாக இருந்ததால் வழக்கு தொடர தேவையில்லை என திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சார்பில் வருமான வரித்துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் சம்பாதித்த பணத்திற்கு சரியாக வரி கட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வரி கட்டிய பிறகு தன்னிடம் இருந்த சொந்த பணத்தை தனக்கு தெரிந்தவர்களுக்கு கடனாக கொடுத்ததாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அதில் சிலர் மட்டும் ஆண்டுக்கு 18% வட்டி விகிதத்தில் பணத்தை திரும்ப கொடுத்ததாகவும், பலர் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் தனக்கு 30 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ள ரஜினி, இதை தான் தொழில்முறையாக செய்யவில்லை என்றும் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு உதவவே செய்ததாகவும் அதற்கு வரி கட்ட வேண்டிய தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் தாக்கல் செய்த இந்த ஆவணத்தை கொண்டு ரஜினிகாந்த் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டதாக பலர் சமூக வலைதளங்களில் கந்துவட்டிரஜினி என்னும் ஹேஷ்டேகை ட்ரென்ட் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து மக்களுக்காக ரஜினி என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்