வரும் கல்வியாண்டில் நீட் தேர்வு நடந்தே தீரும்; அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. நீட் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத காரணத்தால் மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பெரும் பாதிப்படைந்தனர். அனிதா போன்றவர்கள் தங்கள் இன்னுயிரையும் நீத்தனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நெருங்க உள்ள நிலையில், இன்னும் நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு ஆரம்பிக்கவில்லை என்பதால் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மாதங்கள் கூட பயிற்சி கிடைக்காத நிலையில், அவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெற முடியும்? தமிழக அரசு அதன் பொறுப்பற்ற செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை சிதைத்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாவதற்கே தமிழக அரசின் நடவடிக்கைகள் வழி வகுக்கும் என்று எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து டெல்லியில் பேசிய தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார். தகுதியுள்ள மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க முடியுமா? என செங்கோட்டையனிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், நீட் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டு நீட் தேர்வு நடந்தே தீரும் என்றார்.