வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (08:27 IST)

நாகர்கோவில், திருவனந்தபுரம் ரயில்கள் ரத்து? – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Train
ரயில் பாதை பணிகள் காரணமாக நாகர்கோவில் வழி திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்ட ரயில்வே கோட்டங்களில் கடந்த சில நாட்களாக ரயில் பாதை பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மதுரை ரயில்வே கோட்ட பணிகள் காரணமாக ரயில் நிறுத்தங்கள் மற்றும் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பான நேரத்தில் வழக்கம்போல இயங்கி வருகிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் மேலப்பாளையம் – நாங்குநேரி இடையே இரட்டை ரயில் பாதை இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் நாளை மறுதினம் (மார்ச் 16) முதல் மார்ச் 21ம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும், நாகர்கோவில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல திருச்சி – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், மறுமார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K