நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!
தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு சுருக்க திருத்தம் நடவடிக்கைகள் சமீபத்தில் நடந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பிரிவில் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பித்த பின்னரும் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் மாவட்ட ஆட்சியர் கே. பொற்கொடியை சந்தித்து கேள்வியெழுப்பினர். தாங்கள் எப்படி இறந்ததாக அறிவிக்கப்பட்டோம் என்று ரமேஷ் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட சாவடி நிலை அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதுடன், அவர்களின் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையில், தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், எஸ்.ஐ.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று மறுத்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் ஆக்கபூர்வமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Edited by Siva