திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (10:58 IST)

நாகர்கோவில் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை ! கணவன், மகளையும் வெட்டிய கும்பல்

நாகர்கோவில் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய கும்பல் அந்த பெண்ணின் கணவர், மகளையும் வெட்டி விட்டு தப்பியது.


 
நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர  முத்து (வயது 55). தோவாளை மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார். இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுடைய மகள் ஆர்த்தி (15), தேரேகால்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
நேற்று இரவு 10 மணிக்கு முத்துவின் வீட்டு கதவை சிலர் தட்டினர். உடனே முத்துவின் மனைவி கல்யாணி வீட்டுக்கதவை திறந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில்   4 பேர் கும்பல்  கல்யாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. கல்யாணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு முத்துவும், அவருடைய மகள் ஆர்த்தியும் ஓடி வந்தனர். அந்த கும்பல் அவர்களையும் சுற்றி வளைத்து வெட்டியது. அவர்கள் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். 
 
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 
 
அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது  கல்யாணி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். 
 
தகவல் அறிந்த நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  படுகாயமடைந்த முத்து, ஆர்த்தியை மீட்டு தேரேகால்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர்.
 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கல்யாணி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. முத்து குடும்பத்துக்கும், இன்னும் சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அதனால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.