திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மே 2022 (09:41 IST)

பிறந்த குழந்தையை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்! – திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூரில் ஏழ்மை காரணமாக பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை தாயே விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சத்தரை கொள்ளுமேடுபகுதியை சேர்ந்தவர்கள் நம்பிராஜன் – சந்திரா தம்பதியினர். நம்பிராஜன் கூலி வேலை செய்து வரும் நிலையில், சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமான சந்திராவுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே சந்திரா குழந்தை இல்லாமல் காணப்பட்டது குறித்து உறவினர்கள் விசாரித்துள்ளனர். ஆனால் சந்திரா சரியாக பதில் சொல்லாததால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சந்திராவை போலீஸார் விசாரித்தபோது வறுமை காரணமாக குழந்தையை தன்னோடு பணிபுரியும் சக ஊழியர் ஒருவரிடம் ரூ.5 ஆயிரத்திற்கு விற்றுவிட்டதாக கூறியுள்ளார். சந்திராவுடன் பணிபுரியும் ஜெயந்தையை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து குழந்தையை மீட்டுள்ளனர். போலீஸார் தொடர்ந்து சந்திராவிடமும், ஜெயந்தியிடமும் விசாரித்து வருகின்றனர்.