செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (11:25 IST)

கொரோனாவை விட உங்க அறிவிப்புதான் பதட்டமா இருக்கு! – மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பருவமழை, குளிர்காலம் போன்ற காரணங்களால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகளை திறக்க கூடாது என ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

அதை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக அரசு நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறக்கும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பள்ளிகள் திறப்பு – ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையை காட்டுகிறது. முன்யோசனைகள் இன்றி அறிவிப்பு வெளியிட்டு விட்டு பிறகு பின்வாங்குவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கமாகி விட்டது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ”கொரோனா வைரஸைவிட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன. மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள்” என கூறியுள்ளார்.