வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (13:37 IST)

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு வரவேற்பு தர வேண்டாம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் களப்பணியில் ஈடுபடும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு வரவேற்பு தர வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களையும், தமிழகத்தையும் மீட்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழகம் மீள பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அதன்பொருட்டு என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாகவே இவற்றை தவிர்த்து புத்தகங்களை வழங்குகள் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மேலும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா களப்பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளேன். அதன் நிமித்தம் களப்பணிக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு வரவேற்பு அளித்தல் போன்றவற்றை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்தாலும் அதை சம்பந்தபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிக்க வேண்டும்

கொரோனா பெருந்தொற்று சவாலான இந்த காலக்கட்டத்தில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதில் மட்டுமே நம் முழு கவனம் இருக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.