1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:23 IST)

மகிழ்ச்சியுடன் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் கருணாநிதி நலம் கவலைப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியதால்தான் இளைஞரணி விழாவில் பங்கேற்றேன் என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

நாமக்கல்லில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக இளைஞரணியின் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய ஸ்டாலின், ”அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அறக்கட்டளையின் தலைவர் என்ற முறையில் நானும் முழுமையாக பங்கேற்பதுண்டு.

இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் என்னால் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. நம்முடைய தலைவர் கருணாநிதி சிறிது உடல் நலன் பாதிக்கப்பட்டு, அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கட்டாயம் ஏற்பட்டு, நான் மருத்துவமனையில் அவருடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பிறகு தலைவர் உடல் நலம் தேறி, அவருக்கு சிகிச்சை செய்து வரும் மருத்துவர்கள், “நீங்கள் தாராளமாக நிகழ்ச்சியில் சென்று பங்கேற்கலாம், தலைவர் நலமோடு இருக்கிறார், நீங்கள் எந்த கவலையும் பட வேண்டிய அவசியம் இல்லை”, என்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன பிறகு தான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

நீங்கள் அரசியல்வாதிகளாகவும் வர வேண்டும் என்பதும் எனக்கு ஆசை தான். நீங்கள் அரசியல்வாதியாக வந்தால் முதலில் அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன்.

அரசியல்வாதிகளாக வர வேண்டும் என்று கூறுவதற்கு காரணம், எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு அது ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிடும் வகையில் அமைந்திட முடியும். அதேபோல, உங்களைப் போன்றவர்களுக்கு எங்களைப் போன்ற அரசியல்வாதிகளும் தேவைப்படுகிறார்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.