ரேஷன் அரிசி பற்றி புகார்! பைக்கில் பறந்த செல்லூர் ராஜூ – அரண்டு போன அதிகாரிகள்!
மதுரையில் தரமற்ற அரிசி அளிப்பதாக பெண் புகார் அளித்ததையடுத்து உடனடியாக பைக்கில் சம்பவ இடத்திற்கு சென்று சினிமா பாணியில் அதிரடி காட்டியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரையில் பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அப்போது அங்கு தன் கணவர் பிச்சை என்பவருடன் வந்த கார்த்திகை செல்வி என்ற பெண் ரேஷன் கடையில் தரமற்ற அரிசியை கொடுப்பதாகவும், 20 கிலோவுக்கு பதில் வெறும் 9 கிலோ தரமற்ற அரிசியை கொடுப்பதாகவும் அமைச்சரிடம் புகார் செய்தார்.
உடனடியாக தனது ஆதரவாளர் ஒருவரின் பைக்கில் ஏறி ஒரு கிலோ மீட்டர் தூரம் அப்பால் உள்ள பாண்டியராஜபுரம் அங்காடிக்கு விரைந்த செல்லூர் ராஜூ. அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் ரேஷன் கடை விற்பனையாளர் தரமற்ற அரிசியை, அதுவும் எடை குறைத்து கொடுத்து ஊழலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் விற்பனையாளர் தர்மேந்திரனை பணி நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
புகார் அளித்த சில நிமிடங்களிலேயே பைக்கில் விரைந்து சென்று அமைச்சர் நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் வைரலாகி உள்ளது.