செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (14:51 IST)

பிரதமரை கட்டிப்பிடிக்கும் கட்சியல்ல நாங்கள்! – மாயாவதி ஆவேசம்!

உ.பியில் கூட்டணிக்கு மாயாவதி ஒத்துழைக்கவில்லை என ராகுல்காந்தி பேசியதற்கு மாயாவதி பதிலளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீண்டும் உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்துள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பின்னடைவை சந்தித்தன.

இந்நிலையில் சமீபத்தில் உத்தர பிரதேச தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து முதல்வராகுமாறு மாயாவதிக்கு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா். சி.பி.ஐ., அமலாக்க துறை மற்றும் பெகாசஸ் ஆகியவற்றுக்கு அவர் பயந்து விட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பதிலடி தரும் வகையில் பேசியுள்ள மாயாவதி “இதுபோன்று பேசுவதற்கு முன் காங்கிரஸ் நூறு தடவை யோசிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியிலும் இருந்தாலும் கூட எதுவும் செய்யவில்லை. தனது சொந்த கட்சியை கூட சரியாக நிர்வகிக்க முடியவில்லை. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் இப்போது கவனம் செலுத்த வேண்டும். ராகுல் காந்தி போன்று நாடாளுமன்றத்தில் பிரதமரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் கட்சி நாங்கள் அல்ல. மேலும் உலகம் முழுக்க வேடிக்கை பார்க்க சுற்றிக் கொண்டிருக்கும் கட்சியும் நாங்கள் அல்ல” என்று பேசியுள்ளார்.