தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை இந்த சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன. இதன் திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
கடந்த அக்டோபர் மாதக் கணக்கின்படி தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் உள்ள 40 லட்சம் வாக்காளர்களில், 15 லட்சம் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் 10.21 லட்சம் வாக்காளர்களில் சுமார் 1.03 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களை கண்டறியும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், ஜனவரி 15-ஆம் தேதி வரை உரிய படிவங்களை சமர்ப்பித்து மீண்டும் பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Edited by Siva