1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மே 2023 (20:31 IST)

கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்க- டிடிவி. தினகரன்

dinakaran
காலமுறை ஊதியத்தில் பணியாற்றிவரும் தற்காலிக அரசு கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’11 ஆண்டுகள் காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் 450க்கும் மேற்பட்ட தற்காலிக அரசு கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்யும்படி ஒரு நாள் அடையாள அறவழி உண்ணா நிலைக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.

2012ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில மற்றும் சார் நிலைப் பணிகளுக்கான பொது விதிகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புஅலுவலகத்தின் மூலமாக 80 பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் உட்பட 454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

11 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி வந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று கால்நடை உதவி மருத்துவர்கள் எதிர்பார்த்த நிலையில் போட்டித்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து கடந்த மார்ச் 15 ஆம் தேதி போட்டித்தேர்வுகளிலும் அவர்கள் பங்கேற்றனர்.

கால்நடை மருத்துவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகள் கழித்து போட்டித்தேர்வு எழுதியிருந்த நிலையில் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வில் பங்கேற்ற தற்காலிக கால்நடை மருத்துவர்களுக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்கி பணி நிரந்தர செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசு துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை பூர்த்தி செய்யும் வகையில் கால்நடை உதவி மருத்துவர்கள் கோரிக்கையை திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.