1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:02 IST)

கோயில் இடங்களை பிளாட் போட்டால் தான மாடுகளுக்கு ஏது இடம்?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் மாடுகள் சாலையில் சுற்றித் தெரியாமல் பராமரிப்பதற்கு இடம் வழங்கக் கோரி வழக்கு.


கோவில்களில் நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகள் பராமரிப்பது குறித்து தீர்வுகள் என்ன என்பதை திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சுற்றிலும் தனியார் மற்றும் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பல்வேறு கோவில்கள் உள்ளது.  இங்குள்ள கோயில்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசு மற்றும் காளை மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்குகின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் மாடுகளை கோவில் நிர்வாகமும் மற்றும் அதிகாரிகளினால் பராமரிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிப்பு இன்றி திருப்புவனம் பகுதியில் உள்ள சாலைகளில் சாலையில் சுற்றித் திரிகின்றனர்.  இதனால் திருப்புவனம் நான்கு வழி சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு விபத்துக்கள் நிகழ்கிறது.

கடந்த சில வருடங்களாக 10க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாடுகள் சாலை விபத்தில் இறந்துள்ளது. இது தொடர்பாக திருப்புவனம் பேரூராட்சி அதிகாரியிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் மாடுகள் சாலையில் சுற்றித் தெரியாமல் பராமரிப்பதற்கு இடம் வழங்க உத்திரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  மாடுகள் நேர்த்திக்கடனாக பெறப்பட்டால் கோவில் இடத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால், கோவில் இடங்கள் பிளாட் போட்டு விற்று விட்டால் எவ்வாறு இடம் இருக்கும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள். நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகளை பராமரிக்க இடமில்லை என்றால் கோவிலின் வெளியே மாடுகள் பெறப்படாது என பலகை வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் கோவில்களில் நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகள் பராமரிப்பது குறித்து தீர்வுகள் என்ன என்பதை திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.