ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (12:07 IST)

வெளிநாட்டு கள்ள நோட்டை அடித்த கும்பல்! – மாற்ற முடியாமல் போலீஸில் சிக்கினர்!

வெளிநாட்டு கள்ள நோட்டுகளை அச்சடித்து மாற்ற முடியாமல் கும்பல் ஒன்று போலீஸில் சிக்கிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவருக்கு வேதாரண்யத்தை சேர்ந்த சலாவுதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கரன்சிகளை போலியாக அச்சடித்து அதை இந்திய ரூபாயாக மாற்றிவரும் முறைகேடான வேலையை செய்து வந்துள்ளார் சலாவுதீன். கருணாமூர்த்தி தனது வறுமையை சொல்லி புலம்பவும் இரக்கப்பட்ட சலாவுதீன் மெக்சிகன் 1000 டாலர் நோட்டுகள் 385 ஐ கோடுத்து எங்காவது இந்திய பணமாக மாற்றி கொள்ள சொல்லி கொடுத்துள்ளார்.

அதை பெற்றுக்கொண்ட கருணாமூர்த்தி அதை இந்திய பணமாக மாற்றுவதற்காக புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் சில நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இப்படியாக 5 பேர் சேர்ந்து தமிழகத்தில் சில ஊர்களுக்கு சென்று கள்ள டாலர் நோட்டை மாற்ற முயன்றுள்ளனர். எங்கும் மாற்ற முடியாததால் கடைசியாக மதுரை பஜாரில் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றுள்ளனர்.

அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது மேற்கண்ட விசயங்கள் தெரிய வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்துள்ளதுடன், கள்ள நோட்டு அச்சடித்த சலாவுதீன் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.