மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!
கர்நாடக மாநிலத்தில் விஜயநகரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் இட்லி சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயநகரா பகுதியைச் சேர்ந்த 22 வயது ஐஸ்வர்யா, நிறைமாத கர்ப்பிணியாக கடந்த 20ஆம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருந்தனர்.
இந்த நிலையில், திடீரென ஐஸ்வர்யாவுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கூடுதல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக நடந்ததென்று உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அதனை மருத்துவர்கள் மறுக்கின்றனர். ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர், வெளியிலிருந்து இட்லி வாங்கி கொடுத்ததாகவும், அதை சாப்பிட்ட பிறகே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து, இட்லியை எங்கிருந்து வாங்கினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வு, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran