1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (13:25 IST)

மதுரையை புரட்டி எடுத்த கனமழை! எடுத்த நடவடிக்கைகள் என்ன? - மு.க.ஸ்டாலின் பதிவு!

Stalin

மதுரையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன். 

 

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். 

 

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். 

 

Madurai Rains
 

மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். 

 

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K