தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல சேர்ந்துவிட்டனர்: செல்லூர் ராஜூ
திமுகவும் கவர்னரும் புது காதலர்கள் போல் இணக்கம் ஆகிவிட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக திமுக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் பருவமழை குறித்து தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கவர்னர் பாராட்டினார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய போது, "பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மழை நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தார்கள். சனிக்கிழமை இரவு பெய்த ஒரே ஒரு நாள் மழைக்கே மதுரை தங்கவில்லை. மழை பெய்த இடங்களை வந்துச் சென்று அமைச்சர்கள் பார்க்காமல், மழைநீர் வடிந்த உடன் ஆய்வு செய்கிறார்கள்," என்று குறிப்பிட்டார்.
மேலும், "வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சரியான பதிலடி கொடுப்போம். திமுக அரசும் கவர்னர் ஆர். என். ரவியும் புது காதலன், காதலி போல இணக்கம் ஆகிவிட்டார்கள். கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது, முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தது, இப்போதும் தமிழக அரசின் மழை நிவாரண பணியை கவர்னர் பாராட்டியது—இவற்றைப் பார்க்கும்போது, இரு தரப்பிற்கும் இடையே தேனிலவு நடக்கிறது போலத் தெரிகிறது," என்று அவர் கூறினார்.
Edited by Siva