புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (11:30 IST)

சென்னையில் வெள்ளம் வந்தால் சேலத்துக்கு ஓடுவார் எடப்பாடி பழனிசாமி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

EPS Stalin

திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபமாக எடப்பாடி பழனிசாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்து பேசியுள்ளார்.

 

 

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழையில் அரசு சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் திமுக கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட்டு வருவதாகவும் பேசியிருந்தார்.

 

இன்று சென்னை அண்ணா அறிவாலய அரங்கில் நடைபெற்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுவில் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 

பின்னர் பேசிய அவர் “ஆட்சியிருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக பாடுபடுவதுதான் திமுகவின் நோக்கம். திமுக கூட்டணியில் விவாதங்கள் உண்டே தவிர, விரிசல்கள் இல்லை. பதவிக்காகவும், பணத்திற்காகவும் சேர்ந்த கூட்டணி அல்ல இது. கொள்கைக்காக இணைந்த கூட்டணி. தன் கட்சியை வளர்க்க முடியாத எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்சி உடையாதா என விரக்தியில் இருக்கிறார். திமுக கூட்டணி உடைந்து விடும் என கூறி எடப்பாடி பழனிசாமி ஜோசியராகவே மாறிவிட்டார்.

 

பக்கத்து வீட்டில் என்ன தகராறு வரும் என காத்திருப்பவர்களை போல எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார். 

 

மழைக்காலம் தொடங்கும் முன்னரே மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசு சிறப்பாக செயலாற்றியுள்ளது. முன்னர் சென்னையில் மழை வெள்ளம் சூழும் சமயங்களில் எடப்பாடி பழனிசாமி சேலத்துக்கு ஓடி விட்டார்” என்று விமர்சித்துள்ளார்.

 

Edit by Prasanth.K