வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (11:29 IST)

பிரசவத்துக்கு இலவசமா வரேங்க! ஆட்டோவுக்கு அபராதம் விதித்த போலீஸ்!

மதுரையில் பெண் ஒருவரை பிரசவத்திற்காக ஆட்டோவில் அழைத்து சென்ற நபருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்ததால் மனம் வருந்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மதுரையிலும் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை தன் ஆட்டோவின் மூலம் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார் ராமகிருஷ்ணன் என்பவர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறி ஆட்டோவை இயக்கியதாக போலீஸார் ராமகிருஷ்ணனுக்கு 500 அபராதம் விதித்துள்ளனர்.
இதனால் மனம் வருந்திய ஆட்டோ ஓட்டுனர் ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மதுரை மாநகர ஆணையர் பிரேம் ஆனந்தின் பார்வைக்கு சென்ற நிலையில் ஆபத்து நேரத்தில் உதவ வந்த ஓட்டுனரை பாராட்டி அவர் மீதான அபராத தொகையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.