செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:43 IST)

கிராமப்புற மாணவர்களின் வேதனை அளவிட முடியாதது! – கண்ணீர் சிந்திய நீதிபதி!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிய மனு மீதான வழக்கில் நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு மூலமாக மருத்துவ படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பியுள்ள நிலையில் ஆளுனர் மாளிகையில் இருந்து இதுகுறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது நீர் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி இந்த ஆண்டிலேயே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் அளித்த பதிலில் மசோதா ஆளுனரின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதுகுறித்து உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பரிசீலனை செய்ய ஒரு மாத காலம் போதாதா? மாணவர் சேர்க்கை முடிந்த பின் மசோதா நிறைவேற்றப்பட்டால் யாருக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினர். அப்போது கிராம புற மாணவர்களின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை என கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.