புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஜூன் 2025 (14:57 IST)

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

indian post
வரும் ஆகஸ்ட் மாதம் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் UPI வழியாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், பணத்தை கையாளுவதில் இருந்த பல சிரமங்கள் நீங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனை எளிதாகும்.
 
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், தபால் நிலையங்களும் தங்கள் சேவைகளை நவீனப்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே, ஏடிஎம் வசதிகள் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகின்றன. தற்போது வரை, தபால் நிலைய கவுண்டர்களில் நேரடியாக பணத்தை கொடுத்து கணக்குகளில் செலுத்தும் முறை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால், இனி ரொக்கமாக பணம் செலுத்தாமல், UPI போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலமாகவே கவுண்டர்களில் பணம் செலுத்தும் வசதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
 
இந்தப் புதிய வசதியை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர், தபால் நிலையங்களில் UPI பணப் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டபோது சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இம்முறை, அனைத்து தொழில்நுட்பச் சிக்கல்களையும் சரிசெய்து, தடையற்ற மற்றும் பாதுகாப்பான சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சேவை, கோடிக்கணக்கான தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Mahendran