வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (15:25 IST)

சீமானுக்கு எதிராக அமைப்பை தொடங்கினாரா லாரன்ஸ்? தொடரும் மோதல்!

தர்பார் ஆடியோ விழாவில் சீமான் குறித்து லாரன்ஸ் பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

ரஜினிகாந்த் நடித்து வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் ”சீமான் மட்டும்தான் தமிழ் தாயின் பிள்ளையா? நாங்கள் அமெரிக்காவில் பிறந்தவர்களா?” என்று கேள்வி எழுப்பினார். லாரன்ஸின் இந்த பேச்சு சீமான் கட்சிக்காரர்களை கோபமடைய செய்துள்ளது.

இதனால் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் ராகவா லாரன்ஸை திட்டி பதிவிட்டு வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ராகவா லாரன்ஸ் தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் ”நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்னைதான் திட்டி வந்தார்கள். இப்போது என் தாய், தந்தையரையும் திட்டுகிறார்கள்.

தமிழை பயன்படுத்தி அரசியல் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் திட்டி கொள்ளட்டும். நான் ஒரு தனி மனிதன். எனது சுய உழைப்பாலேயே சில அங்கீகாரத்தை பெற்றுள்ளேன். ‘அன்புதான் தமிழ்’ என்ற அரசியல் நோக்கமற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளேன். தமிழ் பெருமையையும், தமிழர் மாண்பையும் உண்மையாக உலகம் முழுவதும் எடுத்து செல்ல உருவாகவுள்ள அமைப்பு இது.

இன்னா செய்தாரே ஒருத்தல் என்ற குறளுக்கேற்ப என்னை திட்டுபவர்கள் நன்றாக இருக்கட்டும் என பிரார்தித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

‘அன்புதான் தமிழ்’ என்று தமிழை பரப்ப லாரன்ஸ் தொடங்கும் அமைப்பு சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சிக்கு எதிரானதாக இருக்குமோ என்று பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த அமைப்பு அரசியல் சார்ந்து செயல்படாது என்று லாரண்ஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.