வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (14:47 IST)

பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயார்; கே.எஸ்.அழகிரி

பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயார்; கே.எஸ்.அழகிரி
ரஜினிகாந்த்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவுக்கு ரஜினிகாந்த் பல்லக்கு தூக்க தயாராவிட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தேசிய அளவில் எதிர்கட்சிகளும், மாணவ அமைப்புகளும், சிறுபான்மையினரும் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ”என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. ஆகியவை தேசத்திற்கு அவசியமான ஒன்று, மாணவர்கள் இச்சட்டத்தை பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்ளாமல் போராடுவது, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்” என கூறியுள்ளார்.
பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயார்; கே.எஸ்.அழகிரி
கே எஸ் அழகிரி
 

ரஜினிகாந்த் பேசியது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிளவுப்படுத்துகிற நோக்கில் பாஜக அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அது இந்திய மக்களுக்கும் எதிரானது” என கூறினார்.

மேலும் அவர், “குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததன் மூலம், பாஜகவுக்கு ரஜினி பல்லக்கு தூக்க தயாராகிவிட்டார், அவரின் ஆன்மீக அரசியல் முகமூடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.