வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (17:36 IST)

2 மணி நேரம் பொறுக்க முடியாதா? - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி

விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய போராட்டம் காரணமாக, நடிகை கஸ்தூரி வேளச்சேரி பகுதியில் சிக்கிக்கொண்டார். எனவே தனது டிவிட்டர் பக்கத்தில் “பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஒரு பேஷனாகிவிட்டது ஏன் என தெரியவில்லை” என ஒரு காட்டமான டிவிட் போட்டிருந்தார்.

 
அந்நிலையில், விடுதலை கட்சியை சேர்ந்த ஆலூர் ஷா நவாஸ் “லட்சக்கணக்கில் திரண்டும் ஒரே ஒரு பேருந்துக் கண்ணாடி கூட உடையவில்லை. வழியில் எந்த வழிபாட்டுத் தலமும் தாக்கப்படவில்லை. பொதுச் சொத்துக்கு சேதாரமில்லை. 2000 ஆண்டுகால ஒடுக்குமுறையை பொறுத்துப் பொறுத்து அறவழியில் போராடும் மக்களுக்காக 2 மணிநேரம் பொறுக்க முடியாதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
நான் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக தொடர்ச்சியாக ஓங்கி குரல் கொடுப்பவள் என்பதும், பல திசைகளிலில் இருந்தும் தாக்கும் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் என் ஆணித்தரமான ஆதரவை அநேகம் முறை பதிவு செய்தவள் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்.நான் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பேச வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்.
 
நான் எல்லா போராட்டத்திற்கும் எதிரியல்ல. பொது மக்களுக்கு ஆதரவு. அதுதான் முக்கியம். பொது மக்களுக்கு, அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் எந்த அரசியல் நிகழ்வுக்கும் நான் எதிரிதான். அரசியல் என்ன? கடவுள் ஊர்வலம் என்றாலும் சினிமா ஷூட்டிங் என்றாலும் என் நிலைப்பாடு இதுதான்.ஆனால் இன்று நடந்த ஆர்பாட்டம், போலீஸ் வரையறையை மீறியது என்பது உங்களுக்கே தெரியும்.

 
இன்றைய போராட்டத்தின் நோக்கம் எனக்கு புரிந்த அளவு நீங்கள் போராடிய மக்களுக்கு நீங்களே சரியாக விளக்கவில்லை என்பதும், எனக்கும் வரும் எதிர்வினைகளிருந்து தெளிவாக தெரிகிறது. உணர்ச்சியை தூண்டும் விதத்தில் dramatic காக கேள்வி கேட்டுவிட்டீர்கள். பட்டியலின மக்களின்பால் எனக்கு உள்ள பாசத்தையும் மீறி, நியாயமான பதிலை தருவது என் கடமையாகிறது.
 
1) இன்றைய ஆர்பாட்டம் மறுக்கப்பட்ட எந்த உரிமையையும் மீட்டெடுக்க செய்யப்பட ஆர்பாட்டம் இல்லை. மாறாக, இன்று பலவாறாக துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் வன்கொடுமை சட்டத்தை மாற்ற கூடாது என்ற கோரிக்கை. Non bailable offence என்பதை பயன்படுத்தி பொய் பிராது கொடுத்து எதிராளியை உள்ளே தள்ளும், பணம் பறிக்கும் சிலரை பார்க்கிறோம். இதில் விசாரணை என்பதை கொண்டு வந்தால் அது ஒட்டுமொத்த தலித் சமுதாயத்தினருக்கு உரிமை மறுப்பு என்பதே .... தவறான பிரச்சாரமில்லயா?
 
2) சரி, இந்த விஷயத்தில் நான் புரிதல் இல்லாமல் இருக்கலாம். அதை தனியாக விவாதிப்போம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க ராஜ் பவனுக்கு பேரணி போவானேன்? ஆர்பாட்டமில்லாமலும் மனு கொடுத்திருக்கலாம், சாலையை மரிக்காமலும் பேரணி சென்றிருக்கலாம். எங்கள் சக்தியில் "சென்னையே ஸ்தம்பித்தது" என்ற விளம்பரத்தை நீங்கள் விரும்பியதாகவே எனக்கு தோன்றியது.
 
3) சரி, இதிலும் நான் தவறாக புரிந்துகொண்டிருக்கிறேன் என்றே இருக்கட்டும். அடுத்தது கேட்டீர்கள் பாருங்கள், 2000 வருடம் காத்திருந்தோம், நீங்கள் 2 மணி நேரம் பொறுக்கமாட்டீர்களா என்று? அய்யா, மிக மிக தவறான அணுகுமுறை . என்னை போன்ற தோழமை சிந்தனை உடையவர்களை சட்டென்று அந்நியப்படுத்திவிடாதீர்கள்! ஒடுக்கப்பட்டவர்களின் துயர போராட்ட வரலாறை பழிக்கு பழி என்ற கோணத்தில் சித்தரிக்காதீர்கள்! உரிமை போராட்டம் என்ற பெயரில் மற்றவரின் உரிமையை பறிப்பதை நியாயப்படுத்தாதீர்கள்!
 
நாள் முழுதும் பணி செய்து, தன் குடும்பத்தை குழந்தைகளை பார்க்க விரைந்தவர்கள், சாலையோரம் வியாபாரம் செய்வோர், இருச்சக்கரவாகனத்தில் வியர்க்க விறுவிறுக்க உணவு விநியோகிபபோர் உட்பட பலதரப்பட்டோர் முன் அறிவிப்பு இல்லாமல் மாட்டிக்கொண்டனர். ஆம்புலன்ஸ் வண்டி சிக்கி கொண்டது. என் சிநேகிதி வண்டி மீது கல் விழுந்தது, ஆனால் சேதமில்லை. இவர்கள்தாம் பொதுமக்கள். உங்கள் போராட்டத்தில் இவர்களின் பங்கும் முக்கியம்.அந்த மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் சம்பாதிப்பதை விட்டு, வயிற்றெரிச்சலை வாங்கி கொள்ளாதீர்கள்! கண்ணாடி உடைக்கவில்லை என்ற பெருமையுடன், எங்கள் மனதை உடைக்கவில்லை என்ற பெருமையும் உங்கள் வசமாகட்டும்.
 
இதற்கு முன்னால் நடந்த எத்தனையோ போராட்டங்களை, போக்குவரத்து மறிப்புக்களை ஏன் விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். Twitter என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை, என் தினசரி வாழ்க்கையில் நான் பார்ப்பதை, சந்திப்பதை பகிர்ந்துகொள்ளும் சமூகவலைத்தளம். செய்தி பத்திரிக்கை அல்ல. பார்த்தது பார்க்காதது அனைத்தையும் பேச. ஆகவே இதை ஏன் பேசினேன், ஏன் இப்பொழுது பேசுகிறேன் அதை என் பேசவில்லை என்ற கேள்விகள் அர்த்தமற்றவை.
 
முடிந்தபொழுது, மீண்டும் பேசுவோம்!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.