செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:58 IST)

தமிழிசைக்கு வாழ்த்து சொன்ன காங்கிரஸ் எம்.பி – அதிருப்தியில் காங்கிரஸ்

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ஒருவர் வாழ்த்து தெரிவித்திருப்பது கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். கட்சியின் செய்தித்தொடர்பாளராக பணியை தொடங்கிய தமிழிசை வளர்ந்து கட்சியின் துணை தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசையை நியமித்துள்ளது மத்திய அரசு.

பலரும் இதற்காக தமிழிசைக்கு வாழ்த்துகள் தெரிவித்து வரும் அதே நிலையில் எதிர்ப்புகளும் வந்துள்ளன. ஒரு கட்சி சார்ந்த தலைவரை இப்படி அரசு பொறுப்புகளில் நியமிப்பது நியாயமாகாது என்று காங்கிரஸ் உறுப்பினரும், புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் இதே கருத்தை முன்வைத்திருக்கும் நிலையில், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாழ்த்து தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது ட்விட்டரில் “தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் களத்தில் தூத்துக்குடியில் தமிழிசையும், திமுக கனிமொழியும் நிறைய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அது தேர்தல் முடிந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் ஏற்கனவே திமுகவுக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் செயல்பாடுகளை விமர்சித்து வந்த தமிழிசைக்கு ஜோதிமணி வாழ்த்துக்கள் கூறியிருப்பது காங்கிரஸாருக்கே உவப்புடையதாய் இல்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.