திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (09:49 IST)

மருத்துவமனையில் கருணாஸ் அனுமதி! கைது நடவடிக்கைக்கு பயந்தா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த வழக்கு, ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு என இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள கருணாஸ் எம்.எல்.ஏவை மீண்டும் கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதனிடையே கருணாஸ் சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு கருணாஸை கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். நெல்லையில் தேவர் அமைப்பு ஒன்றின் நிர்வாகியின் கார் எரிக்கப்பட்ட வழக்கில் கருணாஸ் பெயரும் இருப்பதால் அந்த வழக்கில் அவரை கைது செய்ய முயற்சித்து வருவதாக தெரிகிறது.

இவ்வாறு கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் முயற்சித்த வேளையில், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாஸ் எம்எல்ஏ அனுமதிக்கப்பட்டார். கைதுக்கு பயந்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருணாஸுக்கு நெஞ்சுவலி என்றும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.