கருணாஸ் உடன் தினகரன் ஆதரவாளர்கள் சந்திப்பு: அணி மாறுகிறாரா?
அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ, ஒரு அமைப்பில் இருந்தாலும் சட்டமன்றத்தில் அவர் அதிமுக எம்.எல்.ஏவாகவே கருதப்படுவார். இந்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் குறித்து கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அதிமுக எம்.எல்.ஏ என்ற முறையில் கட்சியும், சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு கருணாஸூக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள் நேற்று கருணாசை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் கிளப் ஒன்றில் நடைபெற்றது.
தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ் செல்வன், கதிர்காமு, முருகன், சுப்பிரமணியன், ரங்கசாமி, மாரியப்பன் கென்னடி ஆகிய ஆறு பேரும் கருணாஸை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, கருணாஸ் கைது குறித்தும் சபாநாயகரின் நோட்டீஸ் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தினகரன் அணியில் கருணாஸ் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.