1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (17:33 IST)

தமிழகத்தில் குணமான நபருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பா ?மீண்டும் மருத்துவமனையில் அனுமதி !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தன் டிவிட்டரில் ‘நம் மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாகக் குணமடைந்தார். இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ என அவர் அறிவித்திருந்தார்.

ஆனால் அவ்வாறு குணமான காஞ்சிபுரம் மாவட்ட இன்சினியர் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற அவரை இப்போது மீண்டும் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது தற்போதைய நிலை குறித்து அரசு சார்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.