வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (21:04 IST)

ஆறுதல் கூறாவிட்டாலும் பரவாயில்லை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்: கமல்ஹாசன்

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பலியான நிலையில் இன்று அவருடைய இல்லத்திற்கு சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுபஸ்ரீ பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
 
சுபஸ்ரீ பெற்றோர்களின் இழப்புக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாத அளவுக்கு, அவர்களின் ஒரே குழந்தை சுபஸ்ரீ. என்ன ஆறுதல் சொல்லி அவர்களை தேற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களின் சோகம், கோபமாக மாறுவதற்கு ஏதுவாக யாரும், எதுவும் சொல்லவேண்டாம் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அமைச்சர்கள் , `குற்றம் எங்கள் மீது இல்லை’ என்பதை சுட்டிக்காட்டுவதை மிகத்தீவிர முயற்சியாக எடுக்கவேண்டாம் என்பது தான் என் கருத்து.
 
 
தயவு செய்து, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் எதுவும் பேசவேண்டாம். நானும் அதை திரும்பி கிளப்பி விட விரும்பவில்லை. அவர்கள் தேறி வரட்டும். அதுவரை அவர்கள் மீது எந்த குற்றத்தையும் சுமத்த வேண்டாம் என்பதை கூறிக்கொள்கிறேன். நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை, இறந்த பெண்ணின் மீது தவறு என சொல்லியிருக்க கூடாது. இனியாவது திருத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு நாடகம் போட்டு பேனர்களை அகற்றுங்கள் என சொல்வதை தவிர்த்து, இனி இந்த கலாச்சாரத்தை ஒழிக்கவேண்டும்.
 
 
ஒழியவில்லை என்றால் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும். எங்கள் கட்சி சார்பாக நாங்கள் செய்யகூடாது என்பது கட்சிகாரர்கள் மட்டுமில்லாமல், சினிமாகாரர்களும் பேனர் வைக்கவேண்டாம் என்பதை வலியுறுத்திக்கொள்கிறேன். குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும். ரொம்ப நாள் ஓடி ஒளிய முடியாது. குற்றத்திலிருந்து தப்பி முடியும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.