ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (21:04 IST)

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் திருமண பேனர் திடீரென விழுந்ததால் பின்னால் வந்த லாரி ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், சரியான குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
 
 
இந்த நிலையில் சுபஸ்ரீ குடும்பத்தார்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதே தவிர இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்த எந்த அரசியல் கட்சியும் நிதியுதவி செய்ய முன்வரவில்லை. குறைந்தபட்சம் சுபஸ்ரீ பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூற எந்த அரசியல் கட்சி தலைவரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். தங்கள் ஒரே மகளின் மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளதை கண்ணீருடன் அவர்கள் கூறியதை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன், சுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.