நாளை மறுநாள் யாரும் இதனை செய்ய வேண்டாம்: தொண்டர்களுக்கு கமல் கண்டிப்பு
கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த், இளையராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்துள்ளார். இதுகுறித்த அறிக்கை ஒன்றில் கமல் கூறியிருப்பதாவது:
நாளை மறுநாள் (07/11/2019) எனது பிறந்த நாள் அன்று, பரமக்குடியில் எனது தந்தையார் அய்யா 0.சீனிவாசன் அவர்களின் திருவுருவச்சிலையினைத் திறக்கவுள்ளோம் என்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகப்பெருமக்கள் எவ்விதத்திலும் பொதுமக்களுக்கு. ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர்கள், ஃப்ளெக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்விசயத்தில் எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும் கண்டிப்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
இனி நிகழவிருக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி கொண்டு வரவிருக்கும் மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.