அரசியல் பணியை தொடங்கிய கமல்; கிராமங்களை தத்தெடுக்க திட்டம்
நடிகர் கமல் ஹாசன் அவரது அரசியல் பயணத்தின் முதற்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் அரசியல் களமிறங்க தீவிரமாக உள்ள நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வார இதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று எழுதி வருகிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மக்களைக் களத்தில் சந்திக்க வரும் பிப்ரவரி 21ஆம் தேதி பயணம் கிளம்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்த பயணத் திட்டத்துக்கு நாளை நமதே என்று பெயர் வைத்துள்ளோம். நான் ஏதோ சக்கரத்தை புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம்.
ஏற்கனவே அதை கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய் பாடம் கற்றேன். உங்கள் ஊரில் என்ன பிரச்சினைகள்’ என்று மக்களிடம் கேள்விகளை முன் வைத்தோம். ‘தெருவிளக்கு சரியாக எரியவில்லை’ என்பது தொடங்கி, ‘தெருவே இல்லை’ என்பது வரை விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.
நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக எங்கள் பானையில் எவ்வகைச் சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறோம். முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எல்ல ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.