1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 25 மே 2024 (20:49 IST)

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

Jayakumar CBCID
நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அவரது குடும்பத்தாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள்  சுமார் 6 மணி நேரம்  விசாரணை மேற்கொண்டனர்.
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த வழக்கின் புகார்தாரர்களான ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் மற்றும் அவரது மகள் ஆகியோர் பாளையங்கோட்டையில் உள்ள என்.ஜி.ஓ. காலனியில் இருக்கும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை எழுத்துப்பூர்வமாக வழங்கினர்.
 
தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கு தொடர்பாக வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவல் மற்றும் கிடைக்கப் பெற்ற தடயங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
 
மறுபுறம், சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான அதிகாரிகள், ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் தனித்தனியாக சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு வீட்டில் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது குறித்தும், ஜெயக்குமார் மரணத்தில் குடும்பத்தினர் மீது எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்தும் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமார் குடும்பத்தார் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதங்களில் இடம்பெற்றிருக்கும் நபர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.