1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 6 மே 2024 (17:04 IST)

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்.! 30 பேருக்கு காவல்துறை சம்மன்..!

Jayakumar
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக தனிப்படை போலீசார் 30 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிலம்பரசனுக்கு அனுப்பிய மனுவில், தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து மே 2ம் தேதி  ஜெயக்குமார் மாயமான நிலையில், அவரது மகன் கருத்தய்யா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே உவரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெயக்குமாரின் தோட்டத்திற்கு உள்ளே, ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
 
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் கைரேகைகளையும் பதிவு செய்தனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய சாட்சியமாக இருந்த ஜெயக்குமாரின் செல்போன் மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அவரது உறவினர்களிடமும் மகன்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் 30 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். கட்சி நிர்வாகிகள்,  வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் உட்பட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.