கோவில் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்! – தமிழக அரசுக்கு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து!
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படுவதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அலுவலர்கள், அர்ச்சகர்கள், சொத்து விவரங்களை அனைத்தையும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் “அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.