1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (11:39 IST)

டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆட்டுக்குட்டி பரிசு..! வன்மத்தை கக்கிய திமுகவினர்!

TRB Raja
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை சென்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக அளித்துள்ளனர்.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கட்சி பிரமுகர்கள் தங்கள் எதிர்க்கட்சியினரை தாக்கி பேசுவதும் அதிகரித்து வருகிறது.

முக்கியமாக இந்த தேர்தல் திமுக – அதிமுக – பாஜக என்ற மும்முனையாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்து விட்ட நிலையில் அதிமுகவும் பாஜகவுக்கு எதிராக பல கருத்துகளை பேசி வருகிறது.

மன்னார்குடி திமுக எம்.எல்.ஏவும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜாவுக்கும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடந்த சில காலமாக வார்த்தை மோதல்கள் நீடித்து வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் “இப்பதான் வேட்பாளர் பட்டியல் வந்துச்சாம். கோயம்புத்தூர்ல மட்டன் பிரியாணியாம்ல” என்று மறைமுகமாக கேலி செய்திருந்தார்.


அதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அண்ணாமலை “கோவைக்கு இரண்டு தகரப்பெட்டிகளோடு வந்த என்னை இந்த கோவை ஒரு பொறியியலாளராக மாற்றி வாழ்க்கை கொடுத்தது. சவுமியா அன்புமணி வேட்பாளராக நிற்பது குறித்து விமர்சிக்க வாரிசு அரசியலில் வந்த டி.ஆர்.பி ராஜாவுக்கு தகுதியில்லை” என பேசியிருந்தார்.

இவர்களிடையே இந்த வார்த்தை மோதல் தொடர்ந்து வரும் நிலையில் கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவை சென்றார். அங்கு அவருக்கு திமுகவினர் ஆட்டுக்குட்டியை பரிசாக அளித்தனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வேண்டுமென்றே அண்ணாமலையை கிண்டல் செய்வதற்காக திமுகவினர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க திமுக – பாஜகவிடையே வார்த்தை மோதல் முற்றி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K