வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (12:53 IST)

ஓபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ்களை இறக்கியது எடப்பாடி பழனிசாமிதான்! – ஓபிஎஸ் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக மேலும் பல ஓ.பன்னீர்செல்வங்கள் களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இணைந்துள்ள நிலையில் மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவதில் சிக்கல்கள் தொடர்ந்து வருகிறது. பாஜக கூட்டணியில் அமமுகவும், ஓபிஎஸ் அணியும் இணைந்த நிலையில் அவர்களுக்கு தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் போட்டியிடும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி இறுதியானது. இதில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரை போலவே ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட 5 பேர் இதுவரை அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.’


ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை உள்ளதால் அவர் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழலில் உள்ளார். இந்நிலையில் திடீரென உள்ள நுழைந்த புதிய ஓபிஎஸ்கள் குட்டையை குழப்பியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுமே குழம்பிப்போய் இருக்கின்றனர்.



இதெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் வேலைதான் என குற்றம் சாட்டியுள்ளார் ஓபிஎஸ் மகன் ஜெயப்ரதீப். அதிமுக நிர்வாகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே எழுந்த பிரச்சினையும், அதை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி வெளியேற்றியதும் நடந்தது. இந்நிலையில் ஓபிஎஸ்க்கு உள்ள செல்வாக்கால் அவர் வெற்றி பெற்று விடுவார் என பயந்து எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற சூழ்ச்சிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சுயேட்சை சின்னத்தில் நின்று, இத்தனை ஓபிஎஸ்களை தாண்டி ஒரிஜினல் ஓபிஎஸ் வெல்வது பெரும் சிரமம் என வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்களாம் ஆதரவாளர்கள். பாஜக நிபந்தனைப்படி அவர்களது சின்னத்திலேயே நின்றிருந்தால் வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பிருந்திருக்கும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறதாம்.

Edit by Prasanth.K