1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:59 IST)

மது போதைப் பொருளா?போதையற்ற பொருளா?-முதல்வருக்கு ராஜேஸ்வரி பிரியா கேள்வி

''கஞ்சா புழக்கத்தினை முழுமையாக ஒழிப்பதற்கான அதிகாரம் கையில் இருந்தும்  அதனை செய்யாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம் ‘’என்று அ.ம.அ.க தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள்விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த  நிலையில்,  அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’இன்று போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு வேண்டும் என்று பேசி இருக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு என்னுடைய கேள்வி மது போதைப் பொருளா?போதையற்ற பொருளா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  ‘’ஏன் இந்த பெயர் அளவிலான விளம்பர போதைப் பொருள் ஒழிப்பு பேச்சு,உண்மையாகவே பேச வேண்டுமென்றால் மதுவின் போதை குறித்தும் மதுவினை படிப்படியாக குறைக்க அரசு எடுக்கும் முயற்சி குறித்தும் பேச வேண்டும் அல்லது வெளிப்படையாக அரசிற்கு அதிக வருமானத்தை கொடுக்கும் துறையாக மது இருப்பதனால்தான் மதுவினை போதைப்பொருள் என்று எங்களால் ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறோம் என்று ஏதாவது காரணம் சொல்லி பேச வேண்டும்.எப்படியோ மதுவும் போதைப் பொருள் என்பதனை விளக்கி பேச வேண்டும்.

கஞ்சா புழக்கத்தினை முழுமையாக ஒழிப்பதற்கான அதிகாரம் கையில் இருந்தும்  அதனை செய்யாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம் ‘’என்று தெரிவித்துள்ளார்.