வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (20:16 IST)

''பட்டியலின மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால்'' - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

‘’பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்று அ.இ.அ.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்று சொல்வார்கள் . இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் திரு . ஸ்டாலின் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளின் ஆயுள் 8 நிமிடம்கூட இருப்பதில்லை . பொய்யும் , புரட்டும் சொல்லி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து , பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் .

ஓட்டுக்காக “ நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் , சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு , ஆதிதிராவிட மக்களின் சம்பந்தி நாங்கள் ” என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் பம்மாத்து பேர்வழி ஆட்சியாளர்களின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது , தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது . இந்த மக்கள் விரோத ஆட்சியில் தலை முதல் கால்வரை சுயநல நோய் புரையோடிப்போய் சமுதாயத்தை சீரழித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது .

தென்காசி மாவட்டம் , கடையம் ஒன்றியம் , வெங்காடம்பட்டி ஊராட்சியில் , லெட்சுமியூர் , ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் சுமார் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதி இல்லை என்றும் , குடிநீர் குழாய் இணைப்பு வழங்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு

உறுப்பினர் திருமதி கே . ஜனதா அவர்களிடம், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையிட்டுள்ளனர் .

ஆதிதிராவிட மக்களின் கோர்கையினை ஏற்று , கழக ஒன்றியக் கவுன்சிலர் திருமதி ஜனதா உடனடியாக ஆதிதிராவிடர் காலனியில் பைப் லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க தனது உறுப்பினர் நிதியில் இருந்து 5.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து , பைப் லைன் அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் , ஆதிதிராவிடர் காலனிக்கு திமுக - வைச் சேர்ந்த கடையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் , வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் திட்டமிட்டு , ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி குழாய்களில் குடிநீர் திறந்துவிடவில்லை .

மேலும் , வெங்கடாம்பட்டி ஊராட்சியில் , குடிநீர் திறந்துவிடாததற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அவலமும் நடந்தேறியுள்ளது . இந்த நிகழ்வு குறித்து அறிந்தவுடன் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் , கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு , உடனடியாக லெட்சுமியூர் , ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் .

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக ஆட்சியில் , பட்டியலின மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் . மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியைக் கூட கொடுப்பதில் இந்த விடியா திமுக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது . ஏற்கெனவே , புதுக்கோட்டை மாவட்டம் , வேங்கைவயல் கிராமத்தில் தமிழகமே தலைகுனியும் வகையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வில் , குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்று நாடகமாடி வரும் நிலையில் , தற்போது , ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கே குடிநீர் வழங்காமல் தடுக்கும் திமுக - வினரின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் .

இந்த அவலங்களைப் பற்றி திமுக - வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் , பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் , அனைவரும் சமம் என்று பேசும் பொதுவுடமைவாதிகளும் வாய்மூடி மவுனமாக இருப்பது விந்தையாக உள்ளது .

தமிழ் நாட்டில் பட்டியலின மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால் , அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.