செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (21:12 IST)

இரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீப் பேட்டி: நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம்

(பிபிசி நேற்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க நிலைகள் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எடுத்த பேட்டி இது).
 
''இன்றைக்கு ஈரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே ஈரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.'' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் இரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் .
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வாரம் உரையாற்றச் செல்வதற்கு உங்கள் பயணத்துக்கு விசா மறுக்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியுமா?
 
பதில்: அப்படித்தான் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் 2019 டிசம்பரிலேயே கடிதம் அனுப்பியும், அதைப் பரிசீலிக்க போதிய கால அவகாசம் இல்லாமல் போனதாக செயலாளர் பாம்பேயோ அழைத்து தகவல் தெரிவித்தார்.
 
கேள்வி: இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
 
பதில்: நல்லது. தலைமையக ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நாங்கள் உங்களுக்குப் பதில் அளிக்கலாம். ஆனால், நல்ல ஆட்சி நிர்வாகம் இல்லாத ஒரு நாட்டுக்கு, இந்த ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா மாறுபட்டதாக உள்ளது, சர்வதேச சட்டங்களுக்கு எந்த மரியாதையும் அளிக்காத ஒரு நாட்டுக்கு, போர்க் குற்றங்கள் செய்யும் நாட்டுக்கு, கலாச்சார தலங்களைத் தாக்கி மேலும் போர் நடத்துவோம் என மிரட்டும் ஒரு நாட்டுக்கு, போர்க் குற்றம் செய்யும் நாட்டின் நிர்வாகத்திடம், எதற்கும் கட்டுப்பட்டு நடக்கும் அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை. இது நான் எதிர்பார்க்காத விஷயம் அல்ல. ஆனால் எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தான் என் கேள்வி. நியூயார்க்கில் நான் என்ன செய்துவிடப் போகிறேன்?
 
கேள்வி: நீங்கள் அனுபவம் உள்ள ராஜதந்திரி. தூதரக உறவுகளில், வெளிப்படையான மற்றும் திரை மறைவிலான அனைத்து வகையிலான செயல்பாடுகளின் மாண்புகள் பற்றியும் அறிந்துள்ளவர். பேச்சுவார்த்தை முயற்சிக்கு, முக்கியமான கதவை மூடுவது போன்ற செயல்பாடாக இது உள்ளதா?
 
பதில்: நல்லது. உங்களிடம் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால், நல்ல புரிதலை உருவாக்க சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்களுடன் கலந்து பேசுவதற்கு இது ஒர் வாய்ப்பாக இருந்திருக்கும்.
 
பதற்றத்தை தணிக்கும் வழியை அமெரிக்கா தேர்வு செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. பதற்றத்தைத் தணிப்பது பற்றிப் பேசுவதும், அதற்கான பாதையை தேர்வு செய்வதும் மாறுபட்டவை. நிறைய பேரை, முக்கியமானவர்களை, இராக் மற்றும் இரான் அதிகாரிகளை, அன்னிய மண்ணில் அமெரிக்கா கொன்றிருக்கிறது. அது போருக்கான ஒரு செயல்.
 
தனிப்பட்ட முறையிலும், பொது வெளியிலும் அவர்களின் மூர்க்கத்தனம், விளைவுகளை அறியாத மனப்போக்கு, பிடிவாதம் ஆகியவற்றை வெளிக்காட்டியுள்ளது. அதுவே பதற்றத்தை அதிகரிக்கும் செயல் தான். ஈரான் மக்களுக்கான மிரட்டல் அது. அதிபர் டிரம்ப்பை, செயலாளர் பாம்பேயோ தவறாக வழிநடத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்.
 
தெஹ்ரான் மற்றும் பாக்தாத் நகரங்களில் மக்கள் தெருக்களில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். அதுபோன்ற ஒரு விடியோவையும் தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இப்போது இராக் மற்றும் ஈரானில் நேற்று மனிதப் பேரலையை அவர் பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தவறான பாதையில் கொண்டு செல்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா?
 
கேள்வி: பதற்றத்தைத் தணிக்க இரான் திறந்த மனதுடன் உள்ளதா? பதற்றத்தைத் தணிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?
 
பதில்: நல்லது.அமெரிக்கா ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, அதன் தொடர் விளைவுகள் அதே பாதையில் செல்லும். முதலில் அது இராக்கின் இறையாண்மையை மீறிவிட்டது. அதுபற்றிப் பேச இராக் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. அது இரானிய குடிமக்களை, இரான் குடிமக்கள் பலரை, இரான் அதிகாரிகள் பலரை அமெரிக்கா கொன்றிருக்கிறது. பயங்கரவாதிகள் போல, கோழைத்தனமான பயங்கரவாதிகள் போல எடுத்துள்ள போருக்கான நடவடிக்கையாக இது உள்ளது. இதற்கு உரிய வகையில் இரான் பதிலடி தரும்.
 
பதற்றத்தைத் தணிப்பது என்பது, அமெரிக்கா மேற்கொண்டு இதுபோல செய்யாமல் இருப்பது, ஈரானை மிரட்டுவதை நிறுத்திக் கொள்வது, இரான் தேசத்திடம் மன்னிப்பு கேட்பதாக இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, பின்விளைவுகள் இருக்கும், அது நடக்கும், ஏற்கெனவே அது தொடங்கிவிட்டது என்று நான் நம்புகிறேன். எங்கள் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
 
கேள்வி: இதற்கு இணையான அளவுக்கு நேரடியானதாக இரானின் பதிலடி இருக்க வேண்டும், இரான் படைகளால் அது முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரான் பாதுகாப்புக் கவுன்சிலிடம் இரான் அதிபர் கூறியுள்ளதாக இன்று காலையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதை நீங்கள் உறுதிப்படுத்த முடியுமா?
 
பதில்: நல்லது. நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேசம். நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிபர் டிரம்ப் கூறியது போல, அளவுக்கு அதிகமானதாக இருக்காது, சட்டமுறைப்படி சரியான இலக்குகளாக அது இருக்கும்.
 
கேள்வி: ராணுவமாக இருக்கும் என்று கூறலாமா?
 
பதில்: அது சட்டமுறைப்படி சரியான இலக்குகளுக்கு எதிரானதாக இருக்கும்.
 
கேள்வி: இதற்கு என்ன அர்த்தம்?
 
பதில்: சட்டமுறைப்படி சரியான இலக்குகள் என்பது பற்றி சர்வதேச போர் சட்டம் மிக தெளிவாகக் கூறுகிறது.
 
கேள்வி: அதுபற்றி சிறிது கூற முடியுமா?
 
பதில்: நல்லது. அவர்கள் சட்ட அகராதியை போய் புரட்டலாம் என்று நினைக்கிறேன்.
 
"இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் சுலேமானீ" - அதிபர் டிரம்ப்
இரான் - இந்திய வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்: "தொடர்பில் இருப்போம்"
கேள்வி: இரானின் ஆதரவு அமைப்புகள், உதாரணமாக ஹிஸ்புல்லா போன்ற மறைமுக அமைப்புகள் பதிலடி நடவடிக்கையில் இறங்காது என்று நீங்கள் சொல்கிறீர்களா?
 
பதில்: எங்களுக்கு மறைமுக அமைப்புகள் எதுவும் கிடையாது. எங்களுடைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை இராக்கின் சாலைகளில் நீங்கள் பாத்திருப்பீர்கள், மறைமுகமானவர்கள் அல்ல. அவர்கள் எங்களால் கட்டுப்படுத்தப் படவில்லை, ஏனெனில் அவர்கள் எங்களின் மறைமுகமான ஆட்கள் இல்லை. உணர்வுகள், சுதந்திரமான சிந்தனை உள்ள மக்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இல்லை என்று நான் சொன்னேன்.
 
கேள்வி: பதிலடி நடவடிக்கை எதுவாக இருந்தாலும், இரான் ராணுவத்தால் தான் எடுக்கப்படும், சீருடைப் படையினரால் எடுக்கப்படும் என்று உறுதி செய்கிறீர்களா?
 
பதில்: 3 அத்துமீறல்கள் நடந்திருப்பதாக நான் சொன்னேன். இராக்கின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது, அதற்கு இராக் அரசும், நாடாளுமன்றமும் பதில் அளித்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள, மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஈரான் குடிமக்கள் பலர், உயர் அந்தஸ்தில் உள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதைத்தான் நாங்கள் செய்வோம். ஆனால் கோழைகளைப் போல அல்ல, தெளிவாக, அதற்கு இணையான வழியில் செய்வோம்.
 
கேள்வி: எப்போது?
 
பதில்: நாங்கள் தேர்வு செய்யும் சமயத்தில்.
 
கேள்வி: சீக்கிரமாகவா?
 
பதில்: நாங்கள் தேர்வு செய்யும் சமயத்தில்.
 
கேள்வி: காசெம் சுலேமானீ மிகவும் அறியப்பட்ட, வலிமையான கமாண்டர். நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகள் அவரை கண்காணித்து வந்தன. அவரைக் கொலை செய்வதற்கு அதிபர்கள் ஒபாமா, புஷ் ஆகியோர் அனுமதி தர மறுத்துவிட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி நடந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கேடு செய்வதாக இருக்கும் என்று அவர்கள் கருதியதே அதற்குக் காரணம். தனக்கு முன்பிருந்த இரண்டு அதிபர்கள் செய்யாததை, அதிபர் டிரம்ப் செய்துள்ளார். அவரைப் பற்றி இது என்ன கருத்தை தருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
 
பதில்: தெஹ்ரான் மற்றும் பாக்தாத் தெருக்களில் மக்கள் உற்சாக நடனமாடுவார்கள் என்று நம்புபவர்கள் அவருக்குத் தவறான ஆலோசனை கூறியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். தனது ஆலோசகர்கள் பற்றி அவர் பரிசீலிக்க வேண்டும்.
 
கேள்வி : அவருடைய செயல்பாடுகளை யூகிக்க முடியாது, ஏனோ தானோ என செயல்படுபவர் என்பதால் அவர் என்ன செய்வார் என ஊகிக்க முடியாத அதிபராக அவர் இருக்கிறாரா?
 
பதில்: ஊகிக்க முடியாத மற்றும் ஒழுங்கற்ற செயல்களை சட்டத்துக்கு உள்பட்டு செய்யலாம். இப்போது அமெரிக்காவில் உள்ள ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. அதுதான் முக்கியமானது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர் சட்டத்தை மதிக்காத வழியில் செயல்படுவதை பார்க்க அமெரிக்கர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது சட்டங்கள் நிறைந்த வனம் அல்ல.
 
கலாச்சார தலங்கள் மீது அளவு கடந்த தாக்குதல்கள், நான் மேற்கோள் தான் காட்டுகிறேன். தங்கள் மக்கள் சாப்பிட வேண்டும் என்று ஈரான் விரும்பினால், அமெரிக்கா சொல்வதை பின்பற்ற வேண்டும். இந்தக் கருத்துகள் அமெரிக்க அதிகாரிகளால் சொல்லப்பட்டவை. ஆனால், போர்க் குற்றங்கள் இழைத்த நேரத்தில், மனிதாபிமானத்துக்கு எதிராக வந்தவை. சட்டத்தை மதிக்காத கிரிமினல் வழியில் தங்கள் பிரதிநிதிகள் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கர்கள் விரும்புகிறார்களா?
 
கேள்வி : அணுசக்தித் திட்டம் பற்றி கடைசி கேள்வி. ஜே.சி.பி.ஓ.ஏ.ல் விதித்துள்ள வரம்புகளை இனியும் மதிக்கப் போவதில்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அணு கதிரியக்கப் பொருள் செறிவூட்டலை எப்போது நீங்கள் மேம்படுத்தப் போகிறீர்கள்?
 
பதில்: மறுபடி சொல்கிறேன். அது எங்கள் தேவையின் அடிப்படையில் தேர்வு செய்யும் காலமாக இருக்கும். ஆனால் வரம்புகளை மதிக்க மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், அடிப்படை வரம்புகளை மீறியதாக கிடையாது. ஜே.சி.பி.ஓ.ஏ. பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினரும் விழிப்புடன் பங்கேற்றதாக இருந்தது என்பதால், இவற்றை மாற்றிவிட முடியும்.
 
அதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஜே.சி.பி.ஓ.ஏ.வுக்கு உள்பட்டும், அதற்கு மாறாகவும் தனது உத்தரவாதங்களை அமல் செய்ய ஐரோப்பியர்கள் தவறவிட்டனர். நாங்கள் அறிக்கைகளாக இல்லாமல், எழுத்தூபூர்வமாக அவர்களுக்குத் தெரிவித்தோம். 5 முறைகள் தெரிவித்தோம். தரப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கையை தொடங்குகிறோம் என்று தெரிவித்தோம்.
 
மிகவும் சட்டபூர்வமான வழியில், சட்டத்தை மதிக்கும் வகையில், ஒப்பந்தத்தின்படியாகவே செயல்படுவதாகத் தெரிவித்தோம். மீறுதல் இருந்தால் என்ன நடவடிக்கைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்ட முறையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டோம். ஒப்பந்தத்தின்படி அளித்த உறுதிமொழிக்கு பணிந்து நடக்கத் தொடங்கினால், இந்த நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிவிடலாம்.
 
எனவே ஜே.சி.பி.ஓ.ஏ. உயிர்ப்புடன் உள்ளது. ஏனெனில் அது மிகவும் யதார்த்தமான ஒப்பந்தம். ஆனால், மரித்துப் போனது எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?அது அவ்வப்போது தோற்றுப் போவதால், அதிகபட்ச அழுத்தம் காணாமல் போகிறது. மரிக்கப் போகும் இன்னொரு விஷயம்: எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு. இனிமேல் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
 
கேள்வி : காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது ஈரான் அதிகார வர்க்கத்தில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளதாக நிறைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரான் அரசு மீது ஈரான் குடிமக்கள் கொண்டிருக்கும் வெறுப்பை திசை திருப்பும் வகையில் இது நிகழ்ந்துள்ளது என்று கருதுகின்றனர்.
 
பதில்: இன்றைக்கு இரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே இரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.
 
கேள்வி : ஆனால் அது உங்கள் மீதான அழுத்தத்தை நீக்குகிறது.
 
பதில்: நாங்கள் அனைவரும் எங்கள் நாட்டை, எங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்க விரும்பும் ஈரானியர்களாக இருக்கிறோம். அமைதிக்காகப் போராடிய மனிதரின் இழப்பிற்கு அனைவரும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.