செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (14:51 IST)

அமெரிக்கா - இரான் தாக்குதல்: என்ன நடக்கிறது? 10 முக்கிய தகவல்கள்!

இராக்கில் செயல்பட்டு வந்த தங்களின் ராணுவத் தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த சில மணி நேரங்களில் இராக் மற்றும் இரானில் நடந்த 10 முக்கிய விஷயங்களை இங்கு தொகுத்துள்ளோம்.
 
1. இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த குறைந்தது இரண்டு ராணுவ தளங்கள் மீது இரானில் இருந்து டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
2. காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
 
3. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
 
4. இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
 
5. இந்த தாக்குதல்களின் எதிரொலியாக, இரான், இராக், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளின் வான்வெளியில் பறப்பதற்கு கிளம்பும் அமெரிக்க சிவில் விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டின் பெடரல் விமான நிர்வாக அமைப்பு தடை விதித்துள்ளது.
 
6. இந்தியா உள்பட பல நாடுகளும் இராக், இரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. இரான் மற்றும் இராக் வான்வெளி வழியாக பறக்கும் விமானங்களின் பாதையையும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மாற்றியுள்ளன.
 
7. அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததையடுத்து, தனது கடற்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களை அப்பகுதியில் பிரிட்டன் அரசு நிலைநிறுத்தியுள்ளது.
 
8. இந்நிலையில், உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர். அண்மையில் பெரிதாகியுள்ள இரான் - அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை.
 
9. இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. இராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 
10. இரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ இரான் கோரவில்லை. ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.