தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்ரவரி மாதமே கோடை காலம் ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்றும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், பிப்ரவரி 17 முதல் 19 வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என்றும், சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும், காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran