திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணி அமைப்பு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் "திருப்பரங்குன்றம் மலையை காக்க சென்னையில் ஏன் பேரணி நடத்தப் போகிறீர்கள்?" என்றும் கண்டனம் தெரிவித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை காக்க பிப்ரவரி 18ஆம் தேதி வேல் யாத்திரை சென்னையில் நடத்த இந்து அமைப்புகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் மூலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை" என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் வாதம் செய்தபோது, "பேரணி நடத்த திட்டமிட்டுள்ள பகுதி நெருக்கடி மிகுந்தது. மேலும், இந்த விவகாரத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை நிலவுகிறது. எனவே, போராட்டத்தை அனுமதிக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, நீதிபதி "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம்" என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், "இது போன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்" என்று தெரிவித்த நீதிபதி, "இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது" என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran