ரவுடிகள் ஆப்பரேஷன் - எஸ்கேப் ஆன பினுவை பிடிக்க தனிப்படை
போலீசாரின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற பிரபல ரவுடி பினு உள்ளிட்ட ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு சென்னை பூந்தமல்லை அருகே உள்ள ஒரு லாரி செட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் விழாவில் 71 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் போது 25க்கும் மேற்பட்ட ரவுடிகள் தப்பி சென்றனர்.
அதில் பினு, கனகுராஜ், விக்கினேஷ் ஆகியோர் போலீசார் தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் ஆகும். இவர்கள் அனைவரின் மீதும் 3 கொலை வழக்குகள் இருக்கிறது. அதேபோல், ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
இவர்கள் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் ஆவர். இவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலூர் பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
போலீசாரிடம் பிடிபட்ட 71 ரவுடிகளும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி மூலம் அவர்கள் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தனர் என்பதை சைபர் கிரைம் போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.