ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (10:06 IST)

தவறான மருத்துவ தகவல்களை சொல்லும் டாக்டர்? – ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்!

Sharmika
சமீபமாக யுட்யூப் சேனல் உள்ளிட்டவற்றில் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா தவறான மருத்துவ தகவல்களை வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபமாக யூட்யூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் பிரபலமாக உள்ளவர் டாக்டர் ஷர்மிகா. சித்த மருத்துவரான டாக்டர் ஷர்மிகா பல்வேறு மருத்துவ தகவல்களை யூட்யூப் சேனல்கள் மூலம் வழங்கி வருகிறார். சில பேட்டிகளில் அவர் பேசிய மருத்துவ தகவல்கள் அறிவியல்பூர்வமற்றதாகவும், அடிப்படை ஆதாரங்கள் அற்றதாகவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்ந்து சர்ச்சைக்குள்ளான நிலையில் சமூக வலைதளங்களிலும் அவர் பேசிய வீடியோக்கள் வைரலாகின. அதை சுட்டிக்காட்டி பதிவிட்ட நெட்டிசன்களும், அலோபதி டாக்டர்கள் சிலரும் டாக்டர் ஷர்மிகா தவறான மருத்துவ தகவல்களை சொல்லி மக்களை தவறாக வழிநடத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் உரிய விளக்கத்தை அவர் அளிக்க வேண்டுமென சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவமுறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து 15 நாட்களுக்கு அவர் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K