வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (21:20 IST)

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை இலங்கையில் அறிமுகம் - அதிகபட்சம் எவ்வளவு செலுத்தலாம்?

Srilanka
இந்தியாவின் பிரபல இலத்திரனியல் பண பரிமாற்று முறையான (UPI) இலங்கையில் இன்று (12) அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை மாத்திரமன்றி, மொரிஷியஸ் நாட்டிலும் இன்று இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இந்த அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.
 
ஆன்லைன் மூலம் இந்த அங்குரார்பண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பிரபல பணபரிமாற்று முறையான லங்கா கியூஆர் (Lanka QR) மற்றும் லங்கா பே (Lanka PAY) நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்தை 2018ம் ஆண்டு பெற்றுக்கொண்ட லங்கா கியூஆர் மற்றும் லங்கா பே நிறுவனத்துடன் இணைந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
 
 
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய நாட்டு பிரஜைகளை இலக்காக கொண்டு இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுபிஐ பண பரிமாற்று நடவடிக்கைகளை அவ்வாறே இலங்கையிலும் தற்போது மேற்கொள்ள முடியும்.
 
2013ம் ஆண்டு இலங்கைக்கு 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
 
2013ம் ஆண்டில் மாத்திரம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 844 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
 
இவ்வாறு நாளுக்கு நாள் இலங்கைக்கு வருகைத் தரும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் பின்னணியில், இந்திய சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணத்தை இலக்குப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
குறிப்பாக இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் இந்திய பணத்தை டாலராக மாற்றி, இலங்கைக்கு கொண்டு வருவதுடன், இலங்கையில் அதனை மீண்டும் இலங்கை ரூபாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் இதற்கு முன்னர் காணப்பட்டது.
 
இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவைபட மூலாதாரம்,FB LIVE SCREEN SHOT
எனினும், இந்த திட்டத்தின் ஊடாக இனி இந்திய பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
லங்கா கியூ நிறுவனத்துடன் யுபிஐ கைகோர்த்துள்ள நிலையில், இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது தமது யுபிஐ கியூஆர (UPI QR) ஸ்கேன் செய்வதன் ஊடாக தமது கொடுப்பனவுகளை இலகுவாக செலுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய பிரஜையொருவர் தனது இந்த முறையின் ஊடாக கொடுப்பனவை இலங்கையில் மேற்கொள்ளும் போது, அவரது இந்திய வங்கிக் கணக்கிலுள்ள பணம் குறைவடைந்து, இலங்கை வர்த்தகரின் வங்கி கணக்கில் இலங்கையில் ரூபாவில் அது வைப்பு செய்யப்படும்.
 
இந்த நடவடிக்கைகளுக்கு இடையில் இனிவரும் காலங்களில் டாலர் பயன்பாடு தேவைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய ரூபாயை நேரடியாகவே இலங்கை ரூபாயாக பரிமாறும் வகையிலேயே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை மார்ச் 2024க்குள் 65,000 ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
இந்த திட்டத்தின் அமலாக்கம் தொடர்பில் லங்காபே நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷன்ன டி சில்வா, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
 
''இலங்கையில் 3 லட்சத்து 80 ஆயிரம் மத்திய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தற்போது லங்கா கியூஆர் முறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பணபரிமாற்று முறையில் தற்போது இந்த முறை பிரபல்யமடைந்துள்ளது. இந்த கியூ ஆர் முறையில் வர்த்தகரின் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவரை காலம் இலங்கையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவுடன் கைகோர்த்துள்ளோம்.
 
இந்தியாவில் கியூ ஆர் முறையை பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்துகின்றனர். இந்த நடைமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இந்திய பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தனது இந்திய ரூபாயை பணத்தை டாலராக மாற்ற வேண்டும். அவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் அந்த டாலரை மீண்டும் இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும். இலங்கை ரூபாயை பெற்ற பின்னரே தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். இது பாரியதொரு நடைமுறையாக இருந்தது.
 
இந்தியாவில் கோடிக்கணக்கான யுபிஐ பயனாளர்கள் இருக்கின்றார்கள். இந்திய பிரஜைகள் இனி இலங்கைக்கு வரும் போது, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டிய தேவை கிடையாது. கியூ ஆரை ஸ்கேன் செய்து, கட்டணங்களை செலுத்த முடியும். உடனடியாக இந்திய கணக்கிலிருந்து பணம் குறைவடைந்து, இலங்கை கணக்கில் இலங்கை ரூபாவில் பணம் வைப்பிலிடப்படும். பணபரிமாற்று முறையின் போது எந்தவொரு நபரும் அச்சப்பட தேவையில்லை. இதுவே பாரிய நன்மையாக காணப்படுகின்றது" என லங்கா பே நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷன்ன டி சில்வா தெரிவித்தார்.
 
 
''இலங்கையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வங்கி கணக்குகள் இருந்த போதிலும், பெரும்பாலான வர்த்தகர்கள் அதனை பயன்படுத்துவதில்லை. அதனால், வர்த்தகர்களுக்கான வருமானம் குறித்த தகவல்கள் வங்கிக்கு தெரிவதில்லை. அதனால், பெரும்பாலான வர்த்தகர்களுக்கு வருமானம் கிடைக்கின்ற போதிலும், வங்கியினால் கிடைக்க வேண்டிய கடன் வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இதுவரை காணப்பட்டது.
 
ஆனால், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதன் ஊடாக வங்கிக்கு வர்த்தகர்களின் வருமானம் குறித்த தகவல்கள் தெரிய வரும். அதனால், வங்கியின் ஊடாக கிடைக்கும் சலுகைகளை இனி வர்த்தகர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். இதனூடாக சமூக பிரச்னைக்கு தீரவு கிடைக்கின்றது. அதேபோன்று, பணத்தை அச்சிடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் பாரிய பணம் செலவிடப்படுகின்றது.
 
பணம் அச்சிடுவதற்காக தலா தேசிய வருமானத்திலிருந்து 1.5 வீதமான தொகை செல்கின்றது என கணிப்பிடப்பட்டுள்ளது. அதனை விநியோகிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதனை மீள்சுழற்சி செய்ய வேண்டும். அதனால், தலா தேசிய வருமானத்திலிருந்து பெருமளவான தொகையை செலவிடாது பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறான புதிய நடைமுறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு கிடைக்கின்றது.
 
அதேபோன்று, சுற்றுலா பயணிகளுக்கு இனி இலங்கைக்கு வருகைத் தந்து தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். இலங்கையிலுள்ள மத்திய, நடுத்தர, பாரிய வர்த்தகர்களுக்கு மாத்திரமன்றி, வர்த்தக நோக்குடன் வருகைத் தரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் இனி பல நன்மைகள் கிடைக்கும். இந்த நடைமுறை அறிமுகப்படுத்துவதன் ஊடாக இரண்டு தரப்பினருக்கும் இவ்வாறான பல நன்மைகள் கிடைக்கும்." என அவர் கூறினார்.
 
 
இந்த நடைமுறையின் ஊடாக ஒரே தடவையில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாயை ஸ்கேன் செய்து, கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என லங்கா கியூ ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
''குறிப்பாக 10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றால், ஐந்து தடவைகள் கியூஆரை ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை மத்திய வங்கி ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. ஆகக் குறைந்த தொகை என்ற ஒன்று இந்த முறையில் கிடையாது. இது இலங்கைக்கு மாத்திரமே பொருத்தமானது.
 
இந்தியா சார்பில் ஏதேனும் கொடுப்பனவு வரையறைகள் இருக்கக்கூடும். ஆனால், இலங்கையில் ஒரே தடவையில் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். இதனை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து மத்திய வங்கி ஆராய்ந்து வருகின்றது. எந்தவொரு கொடுப்பனவையும் இதனூடாக மேற்கொள்ள முடியும்." என நிறுவனம் குறிப்பிடுகின்றது.
 
 
''ஒவ்வொரு படிமுறையாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, முதல் படிமுறையாக இலங்கைக்கு வருகைத் தரும் இந்திய பிரஜைகளுக்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இரண்டாவது படிமுறையில் அதனை நாம் செயற்படுத்தவுள்ளோம். இலங்கை பிரஜையொருவர் இந்தியாவிற்கு செல்லும் பட்சத்தில், அவருக்கு இந்த முறையை பயன்படுத்தும் வசதி இரண்டாவது படிமுறையில் வழங்கப்படும்." என அவர் கூறுகின்றார்.
 
 
பல்லாயிரம் வருடங்களாக நாணய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் இன்றும் நாணயமற்ற தொழில்நுட்ப ரீதியிலான கொடுக்கல் வாங்கலாக இரு நாடுகளுக்கும் இடையில் இன்று மாற்றம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
''இந்திய - இலங்கை உறவில் இது மற்றொரு முக்கியமான தருணமாக கருதுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் ராமர் கோயிலை திறந்து வைத்தீர்கள். அதற்கு நான் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன். இந்தத் திட்டம் நமக்கு இடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவை பிரதிபலிக்கிறது.
 
நமது இரு நாடுகளுக்கும் இடையே பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பயன்படுத்திய நாணயங்கள் இன்றும் நமது அருங்காட்சியகங்களில் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தென்னிந்திய நாணயங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் அந்த உறவை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதையே இன்று செய்கிறோம்.
 
எங்களுக்கு இனி நாணயங்கள் தேவையில்லை. லங்கா கியூஆர் மற்றும் NIPL இணைந்துள்ளன. அத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதனால் எமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இம்முறையைப் பயன்படுத்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ள முடியும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மற்றும் இலங்கைக்கும் மும்பைக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறன. குறிப்பாக வர்த்தகர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் சுமார் 400,000 வர்த்தகர்கள் தொடர்புபட்டுள்ளதாக கருதுகிறேன்.
 
எனவே, இந்திய - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இதனை அடையாளப்படுத்தலாம். எனது அண்மைய உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமரும் நானும் வெளிப்படுத்திய "தொலைநோக்கு அறிக்கையை" செயல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்மையில் பேர்த்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் நான் கலந்துரையாடினேன். இந்த வேலைத்திட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம். மேலும் இந்தச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
"இந்திய பெருங்கடலில் மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பு நாளாகும். நாங்கள் எங்கள் வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இன்று இணைக்கின்றோம். இந்த ரூபே (RuPay) திட்டத்தின் ஊடாக இலங்கை மற்றும் மொரிஷியஸ் நன்மை அடையும் என எதிர்பார்க்கின்றோம்.
 
இந்தியாவின் அண்டைய நாட்டு முதல் கொள்கை என்ற அடிப்படையில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு நாடுகளுடனும் புது டெல்லியின் அதிகரித்து வரும் இருதரப்பு பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்திய சேவை தொடங்குகின்றது." என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.