அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி குறித்த பாடம் நீக்கப்படும்..! ஜெயக்குமார் அதிரடி..!!
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ள பாடத்தை நீக்கும்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினரின் தியாகத்தால் உருவானது எனவும் தொழிலாளர்கள் நலனைக் காத்தவர் எம்ஜிஆர் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக அரசு தொழிலாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் தெரிவித்த ஜெயக்குமார், நடிகர்களில் தைரியமாக செயல்படக்கூடியவர் அஜித்குமார் என புகழாரம் சூட்டினார். கருணாநிதியின் பாராட்டு விழா மேடையிலேயே திமுகவிற்கு எதிராக பேசிய அஜித் உண்மையிலேயே தைரியசாலி எனவும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் கூறினார்.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதியின் வரலாறு இடம்பெற்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் பாட புத்தகத்திலிருந்து கருணாநிதி குறித்த பாடம் நீக்கப்படும் என திட்டவட்டமாக கூறினார்.
மேலும், பள்ளி பாட புத்தகங்களில் வீரம், வரலாற்று சாதனை பற்றிய பாடங்களை மட்டுமே வைக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.